செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-12-25 09:02 GMT   |   Update On 2017-12-25 09:02 GMT
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்:

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் குறைவான சுற்றுலா பயணிகளே வருவார்கள். தற்போது கொடைக்கானலில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 7 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுகிறது.

இதனால் பகல் பொழுதில் காணப்படும் மக்கள் நடமாட்டத்தை விட இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. காற்றில் நிலவும் ஈரப்பதம் 85 சதவீதமாகவும் 8 கி.மீ வேகத்தில் குளிர்ந்த காற்று வீசுவதாலும் பல்வேறு சுற்றுலா இடங்கள் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கொடைக்கானலில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வந்தது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாகவும், பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் நேற்று முதல் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முக்கிய சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வாகன நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஒரு சில சுற்றுலா பயணிகள் குறைந்த இடங்களை பார்த்து விட்டு உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மலைச்சாலையில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News