கும்பகோணம் அருகே மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்பனை: டாஸ்மாக் கடை ஊழியர்கள் கைது
தஞ்சாவூர்:
கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூரில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக திருச்சி டாஸ்மாக் நிறுவன முதுநிலை மண்டல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன சில்லறை விற்பனை உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பந்தநல்லூர் வந்து குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைக்குள் மதுபாட்டில்களை திறந்து அதில் தண்ணீர் கலந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பந்தநல்லூர் டாஸ்மாக் கடை மேலாளர் சரவணன் (வயது41), விற்பனையாளர் பாஸ்கர் (40) அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட காசிதேவன் (50), ஞானசம்பந்தம் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தண்ணீர் கலந்து விற்பனைக்கு வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சரவணன், விற்பனையாளர் பாஸ்கர் ஆகிய 2 பேரையும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்தசம்பவம் பந்தநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.