செய்திகள்
தற்கொலை செய்த செலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து உடல்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தற்கொலையில் மனைவி தகவல்

Published On 2017-12-19 09:44 IST   |   Update On 2017-12-19 09:44:00 IST
நெஞ்சுவலி காரணமாக மனம் உடைந்த என் கணவர் (முன்னாள் பதிவாளர் அங்கமுத்து) வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது மனைவி கூறி உள்ளார்.

பெருந்துறை:

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து (வயது 57). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் ஆகும்.

இவரது மனைவி விஜயலட்சுமி (55). சவுமியா (31) மற்றும் வானதி (29) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது பெருந்துறையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக அங்கமுத்து வேலை பார்த்து வந்தார்.

மனைவி விஜயலட்சுமி பெருந்துறை அடுத்த தோப்பு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் விஜயலட்சுமி பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து வி‌ஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை பள்ளிக்கு சென்று திரும்பிய மனைவியும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்த ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்து விட்டார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தான் பணியாற்றிய போது பணிகள் நியமனம் செய்வதில் சில முறைகேடுகள் செய்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக அவரிடம் காணாமல் போனதாக கூறப்படும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் தான் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் விசாரணை தொடர்பாக நடந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதை அவரது மனைவி விஜயலட்சுமி மறுத்து உள்ளார்.

கணவர் தற்கொலை பற்றி அவர் கூறியதாவது:-

எனது கணவர் (முன்னாள் பதிவாளர் அங்கமுத்து) சில ஆண்டுகளுக்கு முன் இதய சிகிச்சை (ஆண்டியோ) செய்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நான் பள்ளிக்கூடம் சென்ற போது அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.

மேலும் இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீசாரிடமும் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட அங்கமுத்து உடல் இன்று காலை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

Similar News