செய்திகள்
பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் அங்கமுத்து(62). இவரது பதவிக்காலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனங்களில் பல முறைகேடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணியாளர்களை இனச்சுழற்சி முறையில் நியமனம் செய்யவில்லை, தகுதியான ஆட்கள் தேர்வு செய்யவில்லை. போலிச் சான்றிதழ் கொடுத்து பலர் தேர்வாகி இருக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், பதிவாளர் அங்கமுத்து, பணியிலிருந்து விடுபட்ட சமயத்தில் இருந்து மேற்படி பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி சேலம் சூரங்கலம் காவல் நிலையத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அங்கமுத்து மீது புகார் கொடுத்தது. காவல்துறை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதாக இருந்தது.
இந்நிலையில், பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இன்று காலை அங்கமுத்து விஷ மாத்திரை சாப்பிட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதைகண்ட அவரது உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அங்கமுத்து சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.