செய்திகள்
காஞ்சீபுரம் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
காஞ்சீபுரம் அருகே பள்ளி நுழைவு வாயில் கதவில் பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் அரசினர் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி கடந்த 2015-ம் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் பள்ளியில் போதிய கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியின் நுழைவு வாயில் கதவில் பூட்டு போட்டு பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யும் வரை பள்ளியை திறக்க விட மாட்டோம் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.