திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது: தமிழ்நாடு-கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர்-பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹசனிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று இரவு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 4 மணியளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கிய போது திடீரென அந்த லாரி பழுதாகி நின்றுவிட்டது. அதன் டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.
ரோட்டில் லாரி நின்று விட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலே இருந்து வரும் ஒன்றிரண்டு சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல முயன்றது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களும் முந்திக் கொண்டு செல்வதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.
அதிகாலை 4 மணிக்கு பழுதாகிய நின்ற லாரியை 9 மணி வரை மீட்க முடியவில்லை.
சத்தியமங்கலத்தில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் சென்று லாரியை பழுது பார்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.