செய்திகள்

‘ஒக்கி’ புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 27 பேரின் கதி என்ன?

Published On 2017-12-04 13:11 IST   |   Update On 2017-12-04 13:11:00 IST
‘ஒக்கி’ புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 27 பேர் மட்டும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால், அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள் ஆகாஷ் (வயது20), வினிதன் (21), பிரகாஷ் (23), விஜய் (19), சங்கீதவேல் (22), மதன் (23), மணிகண்டன் (25), விஜயகுமார் (29), குமார் (43), வெற்றிசெல்வம் (28), ஜெயக்குமார் (25) உள்பட 35-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றனர்.

இந்தநிலையில் ‘‘ஒக்கி’’ புயலால் ஒரு சில மீனவர்கள் கேரளாவில் இருந்து நாகைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் 27 மீனவர்கள் மட்டும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 27 மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால், அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நம்பியார்நகர் மீனவ பஞ்சாயத்தார்கள், நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் லீனாசெல்வி மற்றும் உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் லீனாசெல்வி, கேரளாவிற்கு சென்ற மீனவர்கள் குறித்து கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Similar News