மாமல்லபுரம் கடல் சிப்பிகள் கண்காட்சியகத்தை கவர்னர் ரூ.700 கட்டணம் கொடுத்து பார்த்தார்
மாமல்லபுரம்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் நேற்று மதியம் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், தலசயன பெருமாள் கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.
பின்னர் கவர்னர் பன்வாரிலால், ஐந்து ரதம் அருகில் உள்ள தனியார் கடல் சிப்பிகள் கண்காட்சியத்தை சுற்றி பார்க்க சென்றார். அங்கிருந்தவர்களிடம் நுழைவு கட்டணம் எவ்வளவு என்று கவர்னர் கேட்டார். ரூ.100 என்று ஊழியர்கள் கூறியதும், உடன் வந்த அதிகாரிகள் நுழைவு கட்டண பணத்தை கொடுக்க முயன்றனர்.
இதனை கவர்னர் பன்வாரிலால் தடுத்தார். மேலும் உடன் வந்த குடும்பத்தினர் 6 பேருக்கும் சேர்த்து ரூ.700 நுழைவு கட்டணத்தை அவரே கொடுத்தார்.
இதனை கண்ட அதிகாரிகளும், கண்காட்சியகத்தில் இருந்த ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.
கண்காட்சியகத்தில் இருந்த சிப்பிகள், சங்குகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
கவர்னர் வருகையால் மாமல்லபுரத்தில் எந்தவித பாதுகாப்பு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளுடனேயே கவர்னர் சென்று புராதன இடங்களை சுற்றி பார்த்தார். இதனால் சுற்றுலா பயணிகளும் வியப்படைந்தனர்.