செய்திகள்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாமல்லபுரம் வருகை

Published On 2017-11-28 05:56 IST   |   Update On 2017-11-28 05:56:00 IST
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை பார்வையிட்டார்.
மாமல்லபுரம்:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை பார்வையிட்டார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வருகை தந்தார். பின்னர் அவர், குடும்பத்தாருடன் கடற்கரை கோவில், ஜந்து ரதம், சங்கு அருங்காட்சியகம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை கல் ஆகிய புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களின் சிறப்புகள் குறித்து கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் காயத்ரி விளக்கி கூறினார்.

அப்போது அங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளிடம், மாமல்லபுரம் பகுதிகள் எப்படி இருக்கிறது? என கவர்னர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், தலசயனப்பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மாமல்லபுரம் வந்த கவர்னரை செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன், சுற்றுலா அலுவலர் சின்னசாமி, சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கவர்னர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Similar News