செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்: கேரள வாலிபர் கைது

Published On 2017-11-27 08:43 IST   |   Update On 2017-11-27 08:43:00 IST
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரள வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரில் இருந்து நேற்று, திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அந்த விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக கோழிகோட்டை சேர்ந்த இஸ்ராத் (வயது 33) என்பவர் வந்திருந்தார். இவர் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அணிந்திருந்த ஷூக்கள் வழக்கத்திற்கு மாறாக சற்று உயரமாக இருந்தன. எனவே அதிகாரிகள் அந்த ஷூக்களை பிரித்துப் பார்த்தனர். அப்போது ஒவ்வொரு ஷூவின் அடிப்பாகத்திலும் தலா ஒரு கிலோ தங்கக்கட்டி வீதம் 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அந்த 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இஸ்ராத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இஸ்ராத் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கூறுகையில், சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் குறிப்பிட்ட இருக்கையில் இருக்கும் ஷூவை அணிந்து சென்னைக்கு செல்ல வேண்டும் எனவும், பின்னர் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று அங்கு வரும் குறிப்பிட்ட நபரிடம் ஷூவை ஒப்படைக்க வேண்டும் என்றும் துபாயில் உள்ள தனது நண்பர் ஒருவர் தெரிவித்ததாக கூறினார். அதனாலேயே அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இஸ்ராத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கார் பார்க்கிங் பகுதியில் நிற்க வைத்து கண்காணித்தனர். ஆனால் அவர் கூறியது போல தங்கக்கட்டிகளை வாங்க யாரும் வரவில்லை. எனவே அந்த தங்கக்கட்டிகளை அனுப்பியது யார்? அவற்றை பெற்றுக்கொள்ள வந்த நபர் யார்? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News