செய்திகள்
நாகையில் கடல் சீற்றம்: இந்தோனேசியா கப்பல் பாறையில் மோதியது
நாகையில் கடல் சீற்றத்தால் இந்தோனேசியா கப்பல் நிலை தடுமாறி பாறையின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுக பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து கடலில் ராட்சத அலைகள் எழுந்தது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றி வந்த ஒரு சிறிய கப்பல் நாகப்பட்டினம் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கப்பல் கடல் சீற்றம் காரணமாக தத்தளித்தது. அதனை துறைமுகத்துக்கு மீட்டு வர நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் விசைப்படகில் சென்று அந்த சிறிய கப்பலை தங்கள் விசை படகுடன் கட்டி இழுத்து வந்தனர். அவர்கள் முகத்துவாரத்துக்கு வந்தபோது கப்பல் நிலை தடுமாறி பாறையின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் மீனவர்கள் நீண்ட நேர கடும் போராட்டத்துக்கு பின் கப்பலை துறைமுக பகுதிக்கு இழுத்து வந்தனர். அங்கு கப்பல் நிலை நிறுத்தப்பட்டது.