செய்திகள்
கேப்பர்மலையில் சிறைத்துறை அங்காடி உணவகத்தை சிறைத்துறை டி.ஐ.ஜி.பாஸ்கரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி

Published On 2017-11-15 09:59 GMT   |   Update On 2017-11-15 09:59 GMT
கடலூர் மத்திய சிறைச்சாலையில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை நுழைவு வாயில் அருகே சிறை கைதிகள் மூலம் சிறை அங்காடி உணவகம், இனிப்பகம், துணி தேய்ப்பகம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் தலைமை தாங்கி சிறை கைதிகள் அங்காடி உணவகம், இனிப்பகம், துணிதேய்ப்பகம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறை கைதிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் மன அழுத்தத்தை போக்க சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடலூரில் இந்த கைதிகள் உணவகத்தில் அனைவரும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் சிறைச்சாலைகளில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தலா ரூ.1 கோடி செலவில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி வைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கோவை, புழல், வேலூர் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கடலூரில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை என்பதை சீர்திருத்த பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யும் அளவிற்கு கைதிகளுக்கு நன்னடத்தை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு பழனி வரவேற்றார். இதில் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News