செய்திகள்

மணிமங்கலம் - பிள்ளைப்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர் ஏரிகள் நிரம்பின

Published On 2017-11-07 12:27 IST   |   Update On 2017-11-07 12:27:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணி மங்கலம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 136 ஏரிகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம் பகுதியில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. இதனால் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணி மங்கலம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

மணிமங்கலம் ஏரியால் 2,029 ஏக்கர் விவசாய நிலங்களும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியால் 1,423 ஏக்கர், பிள்ளைப்பாக்கம் ஏரியால் 1096 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதில் மணிமங்கலம் ஏரி 225 மில்லியன் கன அடியும், ஸ்ரீபெரும்புதூர் ஏரி 234 மில்லியன் கனஅடியும், பிள்ளைப்பாக்கம் ஏரி 122 மில்லியன் கன அடியும் கொள்ளளவு கொண்டது.

மணிமங்கலம் ஏரியால் இருந்து வெளியேறும் தண்ணீர் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தண்ணீர் அடையாறு ஆறுவழியாக செல்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிமங்கலம் ஏரியை தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தற்போது இந்த ஏரி நிரம்பி உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சப்பார் ஏரி உள்ளது. இதனை நம்பி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி போதிய பராமரிப்பு இல்லாததால் இதன் இரண்டு மதகுகளும் சேதமடைந்துள்ளன. தற்போது ஏரி முழுவதும் நிரம்பி கலங்கல் வழியே தண்ணீர் வீணாக கூவம் ஆற்றுக்குள் செல்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆண்டாவது சப்பார் ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News