செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பியது

Published On 2017-11-05 15:12 IST   |   Update On 2017-11-05 15:16:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாம்பரம் ஏரி, வடகால், ஆத்தூர், சோமங்கலம், வையாவூர் உள்ளிட்ட 170 ஏரிகள் நிரம்பியது.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் ஏரிகள் உள்ளதால் இதனை ஏரி மாவட்டம் என்று அழைக்கின்றனர்.

மாவட்டத்தில் சுமார் 924 ஏரிகள் பொதுக்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாம்பரம் ஏரி, வடகால், ஆத்தூர், சோமங்கலம், வையாவூர், உள்ளாவூர், புத்தேரி, அவளுர், களியனூர் உள்ளிட்ட 175 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

மேலும் தாமல், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, மணிமங்கலம் ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5800 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னேரி ஏரியின் கொள்ளளவு 18 அடி. இந்த ஏரியை நம்பி பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது.

ஏரியில் தற்போது நீர் இருப்பு 14.5 அடியாக உயர்ந்து உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளிப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் மற்றும் திருப்போரூரை அடுத்த மானாம்பதி, தய்யூர் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு தாலுகாக்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி விட்டன. ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

Similar News