செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-11-02 16:15 IST   |   Update On 2017-11-02 16:16:00 IST
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
சிதம்பரம்:

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பு இழப்பு நாள் என்று மோடி அறிவித்து 1 ஆண்டு ஆகிறது. இந்த நாள் தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அறிவித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நவம்பர் 3-ந்தேதி கரூரில் மதவாத சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் மழை கால பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் எந்தெந்த அரசு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான செலவீனங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அமைச்சர் பேசும்போது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னேற்பாடாக செயல்படுகிறது என்று கூறுகிறார். ஆனால் அங்கெல்லாம் மழை வெள்ளத்தின் போது மின் கசிவினால் உயிரிழப்பு இல்லை, அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் மின் கசிவினால் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News