செய்திகள்

அரியலூர் அருகே கட்டிப்பிடித்து மாணவிக்கு முத்தம்: அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது

Published On 2017-10-30 09:34 GMT   |   Update On 2017-10-30 09:35 GMT
அரியலூர் அருகே பள்ளி மாணவியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே காரை பாக்கத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருமானூர் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜான் அலெக்ஸ் (வயது 54) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் காரைபாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த மாணவி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது தலைமையாசிரியர் ஜான் அலெக்ஸ், மாணவியை அழைத்து 2 முறை மாணவியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

மேலும் மதியம் உணவு இடைவேளை நேரத்திலும், மாணவர்களின் வருகை பதிவேடை தலைமையாசிரியர் அறைக்கு எடுத்து சென்ற போதும் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

பின்னர் மறுநாள் அந்த மாணவி பள்ளிக்கு சென்ற போது அப்போதும் முத்தம் கொடுக்க ஜான் அலெக்ஸ் முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி, பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

இடையிலேயே பள்ளியில் இருந்து வந்து விட்டதால் அதற்கான காரணம் குறித்து மாணவியிடம் அவரது தாய் கேட்டுள்ளார். அப்போது அழுது கொண்டே நடந்த சம்பவத்தை மாணவி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து உடனடியாக திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமையாசிரியர் ஜான் அலெக்சை கைது செய்தார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது கல்வி அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News