செய்திகள்
ரவி

கடனுக்காக கிட்னியை விற்க கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழிலாளி ஈரோடு திரும்பினார்

Published On 2017-10-25 07:40 GMT   |   Update On 2017-10-25 07:40 GMT
கடனுக்காக கிட்னியை விற்க கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழிலாளி ஈரோடு திரும்பினார். இன்று அவரிடம் கலெக்டர் பிரபாகர் விசாரணை நடத்த உள்ளார்.
ஈரோடு:

ஈரோடு காசிபாளையம் பகுதி காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி(வயது 44). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சம்பூர்ணம் ( 37). டெய்லர்.இவர்களுக்கு நிவேதா(13) என்ற மகளும், விஷால் (11) என்ற மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தாலும் குடும்ப செலவு அதிகமாக இருந்தது. இந்நிலையில் ரவியின் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.

இதனால் ரவி கடன் வாங்கினார். அதற்கு வட்டியும் கட்டி வந்தார். மேலும் மற்றொருவரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கினார். கடனையும், வட்டியும் திரும்ப செலுத்த முடியாமல் ரவி சிரமப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் ரவி மாயமானார். இந்நிலையில் ரவிக்கு கடன் கொடுத்தவர்களில் ஒருவர் ரவியை சிறுநீரகத்தை விற்று ரூ.3 லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளதாக ரவியின் மனைவி சம்பூர்ணம் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தார்.

அதில் தனது கணவருக்கு நடக்க இருக்கும் சிறுநீரக ஆபரேசனை தடுத்து நிறுத்தி மீட்டு தர வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டரிடம் தொடர்பு கொண்டு விவரங்களை கூறி நடக்க இருந்த ஆபரேசனை தடுத்து நிறுத்தினார்.

மேலும் இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நெட்டூர் எஸ்.பி.யிடம் பேசி நடவடிக்கை எடுத்தார்.

சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரவிக்கு நடக்க இருந்த சிறுநீரக ஆபரேசனை தடுத்து நிறுத்தினர். விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரவி தனது தந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரிய வந்தது. தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆபரேசன் செய்யும் கையொப்பத்தில் ரவி தந்தையே கையெழுத்து போட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.இதையடுத்து ரவி நேற்று இரவு ஈரோடுக்கு வந்தார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறும் போது, எங்களுக்கு கிடைத்த தகவல் படிரவி அவருக்கு தெரிந்தே தான் சிறுநீரகத்தை விற்க சென்றார். ஆனால் அவருடைய மனைவியின் அன்பு அவரை மீட்டு இருக்கிறது. ரவி ஈரோடுக்கு வந்து விட்டார்.

இன்று அவரிடம் கலெக்டர் பிரபாகர் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை முடிவில்தான் கந்து வட்டி கொடுமை காரணமாக கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் கேரள சென்றாரா? என்று தெரிய வரும் என்றார்.


Tags:    

Similar News