செம்பரம்பாக்கம் ஏரி உபரி தண்ணீரை குவாரிகளில் சேமிக்க திட்டம்
சென்னை:
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ளது.
இந்த பருவ மழையின் மூலம் கிடைக்கும் தண்ணீரை முறையாக பயன் படுத்த வேண்டும், அதனை வீணாக்க கூடாது என்று நீர் வளத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வார்தா புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனை தொடர்ந்து அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீரை சேமித்து வைக்க எந்த முன் ஏற்பாடுகளையும் செய்யாததால் மழை நீர் கடலில் கலந்து வீணானது. இப்போது குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. கோடை காலத்தை சமாளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இதுபோன்ற நிலை மீண்டும் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்.
உபரி நீரை வீணடிக்காமல் அதனை சேமித்து வைத்து குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை மாற்று ஏற்பாட்டின் மூலம் குவாரிகளுக்கு கொண்டு என்று நிரப்பினால் அது கோடை காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
சிங்கராயபுரம் பகுதியில் உள்ள பயன்படுத்தாத 22 குவாரிகளில் உபரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஏரியில் இருந்து கால்வாய் மூலமாகவும் பைப் லைன் வழியாகவும் குவாரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தான்திகல் மற்றும் மணப்பாக்கம் கால்வாய் மூலம் உபரி நீரை வெளியேற்றி குவாரிகளுக்கு கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த 2 கால்வாய்களும் நீர்ப் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தான்திகல் கால்வாய் போரூர் ஏரியுடன் இணைப்பு கொண்டது. மணப்பாக்கம் கால்வாய் பல்வேறு பகுதிகளில் இருந்து அடையார் ஆற்றில் இணைகிறது.
உபரி நீரை மாற்று திட்டம் மூலம் குவாரிகளுக்கு கொண்டு செல்லும் பணியை பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் 2 நாட்களுக்கு முன்பு பார்வையிட்டார்.
பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக 4 ஏரிகளையும் ஆய்வு செய்து முன் ஏற்பாடுகளை தயார்படுத்தினார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் மக்களுக்கு பயன் இல்லாமல் வீணாவதை தடுக்க இந்த ஆண்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உபரிநீர் பயனற்று கிடக்கும் குவாரிகளில் சேமித்து வைக்கப்படும். அதில் இருந்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்த இத்திட்டம் பேருதவியாக இருக்கும்” என்றார்.