செய்திகள்

தமிழக மக்களை பப்பாளியும் நிலவேம்பு கசாயமும்தான் காப்பாற்றி கொண்டிருக்கிறது: கி. வீரமணி

Published On 2017-10-11 18:57 IST   |   Update On 2017-10-11 18:57:00 IST
தமிழ்நாட்டு மக்களை தற்பொழுது நிலவேம்பு கசாயமும், பப்பாளியும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று திருமண நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசினார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களை தற்பொழுது நிலவேம்பு கசாயமும், பப்பாளியும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு போதிய அளவு செய்ய வில்லை. வருமுன் காப்பதற்கான நிகழ்ச்சியை நடத்தவில்லை.

டெங்கு மட்டும் அல்லாமல் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றை ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அனைத்து கட்சிகளுடன் இணைந்து ஆங்காங்கே குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . அந்த மனப்பான்மை தமிழக அரசிடம் இல்லாதது வருத்தமாக உள்ளது.

தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றார்கள். அதற்காக திராவிடர் கழகம் சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு நடவடிக்கை ஏதும் இல்லாத பட்சத்தில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவிப்போம்.

தீபாவளிப்பண்டிகையை ஒரு பண்பாட்டு திருவிழாவாக கொண்டாட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அது இந்த ஆண்டு முதல் நடைபெறும். நீட் தேர்வு சட்ட விரோதமானது. அதற்கான போதிய ஆதாரங்களை திரட்டி பிரபல சட்ட வல்லுநர்களுடன் ஆலோசணை நடத்தி வழக்கு தொடர்வோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையானது மத்தியில் காவி, மாநிலத்தில் ஆவி, ஆனால் மக்கள் நலன் காலி.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News