செய்திகள்

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: நேரில் வழங்கினார் டி.டி.வி.தினகரன்

Published On 2017-09-30 14:29 IST   |   Update On 2017-09-30 14:29:00 IST
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை டி.டி.வி.தினகரன் இன்று நேரில் வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 1-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம். எல்.ஏ.க்களுடன் இன்று மாணவி அனிதா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். நேற்று இரவு புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தனது சொகுசு பங்களாவிற்கு சென்றார். இரவு அங்கு ஓய்வெடுத்தார்.

இன்று காலை தினகரன் காரில் ஆரோவில்லில் இருந்து அரியலூருக்கு புறப்பட்டார். மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் சென்றனர்.

பின்னர் தினகரனும், 21 எம்.எல்.ஏ.க்களும் இன்று மதியம் காரில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம்.

நாங்கள் தேர்தல் ஆணையத்தோடு வெற்றி பெற்றாலும் அவர்கள் நீதிமன்றத்துக்கு முறையீட்டிற்கு போவார்கள். ஆகையால் இது முடிகிற கதை அல்ல. ஆனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம். அதைத்தொடர்ந்து எந்த எதிர்ப்பு வந்தாலும் அதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து மாணவி அனிதாவின் வீட்டிற்கு காரில் சென்று ஆறுதல் கூறினார்.

தினகரன் அனிதா வீட்டிற்கு செல்வதையொட்டி திருமாவளவன் அவசரமாக சென்றதாக தெரிகிறது.

Similar News