செய்திகள்
சாந்தியின் உடல் அருகே சோகத்துடன் அமர்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர்

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் பெண் நோயாளி உயிரிழப்பு - பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-09-27 11:06 IST   |   Update On 2017-09-27 11:06:00 IST
அரியலூர் அருகே அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரவி, செருப்பு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது 42). இவர்களுக்கு கீர்த்தனா (26), சினேகா (15) என்ற 2 மகள்களும், கதிர்செல்வன் (13), கலைச்செல்வன் (6) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடையார்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். இருப்பினும் அவர் முற்றிலும் குணமாகவில்லை. நேற்றிரவு முதல் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை ரவி, சாந்தியை அழைத்து கொண்டு உடையார்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை. பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தார். அவரிடம் டாக்டர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து தான் வருவார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ரவி, தனது மனைவியை மடியில் படுக்க வைத்தவாறு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து, டாக்டர்கள் வருகைக்காக காத்திருந்தார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு வந்த டாக்டர், சாந்தியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இது ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்த ரவியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், டாக்டர்கள் இல்லாததே சாந்தியின் உயிரிழப்புக்கு காரணம். டாக்டர்கள் இருந்திருந்தால் சாந்திக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கலாம். எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.



Similar News