செய்திகள்
மாரியப்பன் கென்னடி

மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு கொலை மிரட்டல் கடிதம்

Published On 2017-09-09 11:37 IST   |   Update On 2017-09-09 11:37:00 IST
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு “எடப்பாடிக்கு ஆதரவளிக்காவிட்டால் குடும்பத்தோடு தீர்த்துகட்டுவோம்” என்று கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மாரியப்பன் கென்னடி. டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது கர்நாடக மாநிலம் குடகில் தங்கி உள்ளார்.

மாரியப்பன் கென்னடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. இங்கு அவரது உதவியாளர் விஜயகுமார், தினமும் வந்து தொகுதி மக்கள் தரும் மனுக்களையும் தபாலில் வரும் மனுக்களையும் வாங்கி வைப்பது வழக்கம்.

தபாலில் வந்த கடிதங்களை அவர் பிரித்து பார்த்தபோது ஒரு கடிதம் கொலை மிரட்டல் விடுத்து வந்திருந்தது.

அந்த கடிதத்தில், “தினகரனுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மானாமதுரை நகர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கரூர் முத்துக்குமார் என்ற பெயரில் சென்னையில் இருந்து பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. மிரட்டல் கடிதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



Similar News