வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: ஏராளமானோர் குவிந்தனர்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மேலும் ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடி ஏற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
கோவில் வளாகம், கடற்கரை, பழைய கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.