செய்திகள்

கோடியக்கரை அருகே மீனவர்களின் மீன்களை பறித்த இலங்கை மீனவர்கள்

Published On 2017-09-06 11:58 IST   |   Update On 2017-09-06 11:58:00 IST
வேதாரண்யம் மீனவர்களின் மீன்களை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மயில் வாகனன். இவருக்கு சொந்தமான படகில் செல்வமணி, கோவிந்தன், ரவிகுமார், செல்வகுமார், வெற்றிவேல் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதே போல் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் ஆனந்தன், கலைமாறன், கதிரவன், சரவணன் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரைக்ககு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர்.

இலங்கை கடற்படையினர் வேதாரண்யம் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் இரும்பு குண்டுகளால் தாக்கினார்கள்.

அப்போது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

மீன்கள், வலைகளை பறி கொடுத்த வேதாரண்யம் மீனவர்கள் வெறுங்கையுடன் கரைக்கு திரும்பினார்கள். இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படை, மீனவர்கள் தாக்குதலுக்கும் இலங்கை மீனவர்கள் மீன்களை பறித்து செல்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேதாரண்யம் மீனவர்கள் கூறினர்.

Similar News