செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி பிணமாக கிடக்கும் காட்சி.

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை: உடலை மீட்டு போலீசார் விசாரணை

Published On 2017-09-02 11:07 IST   |   Update On 2017-09-02 11:07:00 IST
சீர்காழி அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி உடலை மீட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிதம்பரம் செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தனர்.

வாலிபர் 2 கால்களும் துண்டான நிலையிலும், பெண் தலை துண்டித்த நிலையிலும் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் காலை அந்த வழியாக நடைபயிற்சி செல்பவர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை ரெயில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் பலியானவர்கள் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் மடவாமேடு சாலையில் வசிக்கும் இளங்கோவன் மகள் இந்துமதி(வயது 17), பழைய பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் தினகரன் (17) என்று தெரிய வந்தது. இவர்கள் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். வீட்டில் இருந்து நேற்று மாயமான இவர்கள் அதே பகுதியில் உள்ள ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் காதல் ஜோடிகளா? அவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Similar News