ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும்: தே.மு.தி.க. பொருளாளர் பேட்டி
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை, நீட் தேர்வு பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன் வரவேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் நேற்று ஒரு முதலமைச்சர், இன்று ஒரு முதலமைச்சர், நாளை யார் முதலமைச்சர் என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியை கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியை கொண்டு வரவேண்டும். பின்னர் முறையாக சட்டமன்ற தேர்தலை நடத்தவேண்டும்.
தே.மு.தி.க. தமிழகத்தில் வலுவான இயக்கமாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். நாஞ்சில் சம்பத் ஓர் அரசியல் வியாபாரி, அவரது பேச்சை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அரியலூர் மாவட்டத்தில் ஓர் அரசு சிமெண்ட் ஆலை, 6 தனியார் சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. அளவுக்கு அதிகமாக சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதால் விவசாயம் செய்ய முடியாமலும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் இதனை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுக்கும் மேல் ஆகிவிட் டது. திட்டம் செயல்படுத்தப் படவில்லை, இழப்பீடு தொகையும் வழங்கவில்லை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீன்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.