செய்திகள்

திட்டக்குடி அருகே நள்ளிரவு லாரி மீது வேன் மோதல்: 5 பக்தர்கள் பலி

Published On 2017-08-27 15:50 IST   |   Update On 2017-08-27 15:50:00 IST
திட்டக்குடி அருகே நள்ளிரவு லாரி மீது வேன் மோதிய விபத்தில் 5 பக்தர்கள் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 17 பேர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்ணாடம்:

புதுவை கொத்தப்புரி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 52). இவரது மனைவி ஆரியம்மா (47). இவர்கள்  நேற்று இரவு ஒரு வேனில் 22 பேர் கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை புதுவையை சேர்ந்த விக் னேஷ் (32) ஓட்டிச்சென்றார்.

நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வேன் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் காந்திநகர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.

திடீரென்று அந்த லாரியை டிரைவர் பெட்ரோல் பங்க்குக்கு திருப்ப முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினர்.

இந்த விபத்தில் வேனில் இருந்த பார்த்தீபன், அவரது மனைவி ஆரியம்மா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வேனுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 20 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அனிதா (27), சின்னையன் (70), மல்லீஸ்வரன் (2) ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் விக்னேஷ், அஸ்வின், சுரேஷ்குமார், புஷ்பா, சங்கராதேவி, பூங்கொடி உள்பட 17 பேர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்தால் ராமநத்தம் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News