செய்திகள்

ஒரே விமானத்தில் பயணித்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் - ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள்

Published On 2017-08-23 06:54 GMT   |   Update On 2017-08-23 06:54 GMT
அரியலூரில் இன்று மாலை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் இன்று எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமருவதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் போடப்பட்டுள்ளன. மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா எஸ். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தினை திறந்து வைத்து,  நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர்.

அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தனித்தனியாக நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கிய பின்னர் முதன் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பேச உள்ளதால் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
Tags:    

Similar News