செய்திகள்
வாகனம் மோதி பலியான சிறுத்தை.

சத்தியமங்கலம் அருகே மானை விரட்டி சென்ற சிறுத்தை வாகனம் மோதி பலி

Published On 2017-08-11 13:24 IST   |   Update On 2017-08-11 13:24:00 IST
சத்தியமங்கலம் அருகே மானை விரட்டி சென்ற சிறுத்தை வாகனம் மோதி பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பலியான சிறுத்தை உடலை மீட்டனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி. இங்குள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பண்ணாரியம்மன் கோவிலையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. மேலும் கோவில் அருகே வன சோதனை சாவடி உள்ளது. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை 3 மணி அளவில் வனசோதனை சாவடி அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மானை வேட்டையாட அதை விரட்டியபடி ஒரு பெண் சிறுத்தை பாய்ந்து சென்றது.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அந்த சிறுத்தை மீது மோதியது. இதில் அந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். வாகனம் மோதி பலியான சிறுத்தை உடலை மீட்டனர்.

பிறகு அதனை காராச்சி கோரை வனசோதனை சாவடி கொண்டு சென்று அங்கு கால்நடை டாக்டரால் உடல் பரிசோதனை செய்யப் பட்டது. பிறகு அங்கேயே குழி தோண்டி சிறுத்தை உடல் புதைக்கப்பட்டது.




Similar News