செய்திகள்
கோபி அருகே பாலத்தில் மோதி கவிழ்ந்து கிடக்கும் 2 கார்களை படத்தில் காணலாம்.

கோவை-பொள்ளாச்சியில் இருந்து வந்த 2 கார்கள் ஒரே இடத்தில் பாலத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி

Published On 2017-08-10 11:30 IST   |   Update On 2017-08-10 11:30:00 IST
கோவை-பொள்ளாச்சியில் இருந்து வந்த 2 கார்கள் ஒரே இடத்தில் பாலத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் அந்தியூர்-குருநாதசாமி கோவில் ஆடி தேர்த் திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்த 6 நண்பர்கள் ஒரு காரில் நேற்று இரவு அந்தியூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 27), சரவணன் (24), சுரேஷ் (33), சிவகுமார் (27), முஜிபுர் ரகுமான் (20), சஞ்சீவ் (20) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். சரவணன் காரை ஓட்டி வந்தார்.

நள்ளிரவு 12 மணி அளவில் கார் கோபி அருகே உள்ள கருங்கரடு என்ற இடத்தில் ஒரு வளைவு பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் பாலத்தில் மோதி பாலத்தின் கீழ் தலைகீழாக விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்தும் ஒரு காரில் 5 பேர் அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை மணிகண்டன் (25) என்பவர் ஓட்டி வந்தார். லட்சுமணன் (25). சித்தார்த் (24), அனீஸ் (23), வினோத்குமார் (21) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரும் கோபி அருகே உள்ள கருங்கரடு வளைவு பாலத்தில் இரவு வந்தபோது அதே பாலத்தில் மோதி பாலத்தின் கீழ் தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் 5 பேரும் படுகாயத்துடன் துடித்தனர். உடனே அவர்களும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஒரே பாலத்தில் இரு கார்களும் மோதி கவிழ்ந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Similar News