செய்திகள்
கருத்து கேட்பு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்.

கடலூர், நாகை மாவட்டத்தில் அடுத்த தலைமுறை வாழ முடியாது: திருமாவளவன்

Published On 2017-08-09 05:05 GMT   |   Update On 2017-08-09 05:05 GMT
பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைவதால் கடலூர், நாகை மாவட்டத்தில் அடுத்த தலைமுறை வாழ முடியாது என திருமாவளவன் கூறினார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னப் பெருந்தோட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஈழவளவன், வேலு குபேந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

கடலூர், நாகை மாவட்டத்தில் 45 விவசாய கிராமங்களில் 57,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோல் மண்டலத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுவதுடன், விளை நிலங்கள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதுவரை காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக இருந்து வந்தது. தற்போது கெமிக்கல் மண்டலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை கடலூர், நாகை மாவட்ட பகுதிகளில் வாழ முடியாது.

நெற்களஞ்சியமாக திகழும் டெல்டாவில் இத்திட்டம் செயல்படுத்துவது வேதனை அளிக்கிறது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் நெடுவாசல், கதிராமங்கலம் போல் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 2 இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களிலும் மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நாகை, கடலூரில் தலா ஒரு ஊரை தேர்வு செய்து மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News