பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் தருமகுளத்தில் காவிரி காப்போம் பிரச்சார விழிப்புணர்வு பயணம் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:-
காவிரி ஒப்பந்தத்தை தி.மு.க ஆட்சியில் புதுபிக்காதது தான் காவிரி பிரச்சனைக்கு காரணம். கடந்த 10ஆண்டுகளில் 900டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்ததை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை.இனியும் பொறுக்கமுடியாது. கர்நாடகாவில் வரவுள்ள சட்டபேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவேண்டும் என்றுதான் மத்திய அரசு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட பா.ம.க. ஒருபோதும் விடாது.
தமிழகத்தில் 68 மணல் குவாரிகள் உள்ளன. இதில் கொள்ளிடம் காவிரியில் மட்டும் 50சதவீதம் மணல்குவாரிகள் உள்ளன.இந்த மணல் குவாரிகளில் விதி முறைகளை மீறி 40அடி ஆழத்திற்கு மேல் மணல் அள்ளப்படுகிறது. இதற்கு உரிமை வழங்கிய மாவட்ட கலெக்டர் தான்பொறுப்பு. இன்னும் இரண்டு வாரங்களில் எனது தலைமையில் மணல்குவாரிகளில் ஆய்வு செய்து விதிமீறல்களை வீடியோ பதிவு செய்து சட்டப்படி கடலூர், நாகை, தஞ்சாவூர் கலெக்டர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குதொடர்வேன்.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டவடிவம் இயற்றி அறிவிக்கவேண்டும். இதுதான் காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு. டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கூட இருக்ககூடாது.
நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை அப்புறப்படுத்தி முப்போகம் விளையும் 57ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களை அழித்து பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. மக்களை திரட்டி போராடுவோம். ராணுவமே வந்தாலும் பெட்ரோ மண்டலத்தை தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி,மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி,நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன்அன்பழகன்,துணை செயலாளர்கள் செந்தில் குமார், முரளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.