செய்திகள்

அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2017-07-25 10:29 GMT   |   Update On 2017-07-25 10:29 GMT
அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தியூர், பவானியில் இதுவரை 12 பேர் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பவுனாள். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த 12 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது ரத்த மாதிரி எடுத்து சோதனையிட்டபோது டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஆனால் காய்ச்சல் குணம் ஆகாததால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News