செய்திகள்

ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2017-07-11 10:27 IST   |   Update On 2017-07-11 10:28:00 IST
ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
மதுரை:

உலக அளவில் ஆட்கொல்லி வைரஸ் நோயான ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் இந்தியாவில் வருவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சுகாதார துறையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் பயணிகளை கண்காணித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News