செய்திகள்
கைதான வடமாநில வாலிபர்களை படத்தில் காணலாம்.

அரியலூர் நகைக்கடையில் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2017-07-10 10:44 IST   |   Update On 2017-07-10 10:44:00 IST
அரியலூர் நகைக்கடையில் மே மாதம் நடந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 64 கிலோ வெள்ளி, 64 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் கடந்த 26-5-2017 அன்று மர்ம நபர்கள் ‌ஷட்டர் கதவை உடைத்து 84 கிலோ வெள்ளி, 84 கிராம் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் சுந்தர்ராமன் அரியலூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது, கடையில் திருடிய நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து விசாரித்த போது கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சஞ்சீவ் பல்வார் (வயது 32), அம் போசிங் (40) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்று 2 பேரையும் கைது செய்து அரியலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை அரியலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மகாலட்சுமி, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 64 கிலோ வெள்ளி, 64 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.



Similar News