செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 85-வது நாளாக நீடிக்கும் பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-07-05 04:36 GMT   |   Update On 2017-07-05 04:36 GMT
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 85-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 85-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.



நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக தென்னை மட்டைகளை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டம் வெளிநாடுகளில் ஏற்படுத்திய பாதிப்புகளின் அடிப்படையில்தான் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தோம். ஆனால் தற்போது கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்தினால் நெடுவாசலும் எரியும். அப்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றுமே நடக்காதது போன்று காட்டிக் கொள்ளும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த போராட்டத்தை நடத்தினோம் என்றார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற கியூ பிரிவு அலுவலக திறப்பு விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் சென்றார். பின்னர் அங்கிருந்து நெடுவாசல் அருகே நல்லாண்டார் கொல்லைக்கு 4 கார்களில் போலீசாருடன் சென்றார். அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அவர் ஆய்வு செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்துக்கு சென்றனர். மேலும் அவரை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களிடம் இந்த இடத்தை பார்வையிடுவதற்காக வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News