செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஆகஸ்டு 22-ந்தேதி வேலைநிறுத்தம்: இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Published On 2017-07-01 07:43 IST   |   Update On 2017-07-01 07:43:00 IST
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆகஸ்டு 22-ந்தேதி வேலைநிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சென்னை:

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு நிதி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதாவை (2017) கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க கூடாது. பெரு நிறுவனங்களின் வராக் கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வங்கி கிளைகளை மூடக்கூடாது. வங்கி பணிகளை வெளி ஆட்களுக்கு விட கூடாது. வாடிக்கையாளர்களை கசக்கி பிழியும் சேவை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 22-ந் தேதி ஒருநாள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டங்களுக்கு பிறகும், மத்திய அரசு தனது மக்கள் விரோத போக்கை கைவிடாவிட்டால் அக்டோபர், நவம்பர் மாதத்தில் 2 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News