செய்திகள்

பெருங்களத்தூரில் சிக்னல் மூடப்பட்டதை கண்டித்து அனைத்துக்கட்சியினர் மறியல்

Published On 2017-06-27 14:31 IST   |   Update On 2017-06-27 14:32:00 IST
பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிக்னல் மூடப்பட்டதை கண்டித்து அனைத்துக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பஸ்நிலையம் அருகே சிக்னல் உள்ளது. முக்கிய சாலையான இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை செல்ல இந்த சிக்னலை தாண்டி ரெயில்வே கேட் வழியாக செல்லும்.

இதேபோல கேளம்பாக்கம், நெடுங்குன்றம், சதானந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வண்டிகள் சிக்னல் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை பிடித்து தாம்பரம், சென்னை நோக்கி செல்கின்றன.

சென்னையில் இருந்து புறப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களும் கோயம்பேடை அடுத்து நின்று செல்லும் முக்கிய பஸ் நிறுத்தமாக பெருங்களத்தூர் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

வண்டலூரில் இருந்து பெருங்களத்தூரை கடக்க சுமார் 1½ மணி நேரத்துக்கு மேல் ஆகும்.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பெருங்களத்தூர் சிக்னலை போலீசார் திடீரென மூடினர். அப்பகுதியில் ‘பேரிகார்டு’ அமைத்து சாலையை அடைத்தனர்.

வாகனங்கள் அனைத்தும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வண்டலூர் மேம்பாலத்தில் ஏறி இறங்கி வரும் வகையில் அறிவுறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். நடந்து செல்பவர்களும் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை சிக்னல் மூடப்பட்டதை கண்டித்து பெருங்களத்தூர் பஸ்நிலையம் அருகே அனைத்து கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பாரதிய ஜனதா மாவட்ட துணைத் தலைவர் பொற்றாமரை சங்கரன், அ.தி.மு.க.வை சேர்ந்த வளையாபதி, தி.மு.க.வை சேர்ந்த சங்கர் மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் பீர்க்கன்கரணை போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிக்னல் அருகே நடந்து செல்பவர் சாலையை கடக்க மட்டும் உடனடியாக வழி ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் வண்டலூர் மேம்பாலத்தில் சுற்றிவர அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News