செய்திகள்
வடகரையில் உள்ள தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவி மகாஸ்ரீ.

ஒரு மாணவி மட்டும் படிக்கும் அரசு பள்ளி

Published On 2017-06-24 09:56 GMT   |   Update On 2017-06-24 09:56 GMT
செம்பனார்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒரு மாணவி மட்டும் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பணியையும், பள்ளியை பராமரிக்கும் பணிகளையும் தலைமை ஆசிரியர் ஒருவரே பார்த்து வருகிறார்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி வடகரை கிராமத்தில் 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு வடகரை, வாடாகுடி, புளிகண்டமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த நிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை படிப்படியாக குறைந்து, தற்போது அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் கழிவறை, சமையலறை, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து இருந்தும் தங்களது குழந்தைகளை மேற்கண்ட பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயங்குகின்றனர். அதற்கு மாற்றாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். இதனால் அரசு தொடக்க பள்ளியில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது மகாஸ்ரீ என்ற மாணவி மட்டும் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பணியையும், பள்ளியை பராமரிக்கும் பணிகளையும் தலைமை ஆசிரியர் மகாலட்சுமி ஒருவரே பார்த்து வருகிறார்.

இதுகுறித்து அந்தபகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்த 15 மாணவர்கள் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்து விட்டனர். இதனால் பள்ளியில் தற்போது ஒரே ஒரு மாணவி மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் மேலாண்மைக்குழு இயங்கி வந்தாலும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான எந்தவித முயற்சியும் அந்த குழுவினர் எடுக்கவில்லை. வடகரை போன்ற ஏராளமான உள்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை தவிர்க்க கிராமங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணிகளை நடத்துவதோடு, பெற்றோர்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும். எனவே, உடனடியாக வடகரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது, ஒரே ஒரு மாணவி படிப்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.



Tags:    

Similar News