செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை - வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

Published On 2017-06-19 12:27 IST   |   Update On 2017-06-19 12:27:00 IST
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க் ஊழியர் அவரது மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணப்பையை பிடித்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் திருமேட்ரலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம். இவரது மனைவி புவனேஸ்வரி.

காஞ்சீபுரம் ரெங்கசாமி குளம் காளத்தி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பிரேம் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி அங்கு கிளர்க் ஆக உள்ளார்.

தினமும் பிரேம் பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை இரவில் வீட்டுக்கு எடுத்து சென்று மறுநாள் காலையில் பாங்கியில் செலுத்துவது வழக்கம்.

நேற்று வசூலான பணம் ரூ.5 லட்சத்தை பிரேம் பையில் வைத்து வீட்டுக்கு எடுத்து சென்றார். இன்று காலையில் பிரேம் அவரது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்குக்கு சென்று கொண்டிருந்தார்.

காலை 6 மணியளவில் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் பையில் ரூ.5 லட்சம் பணத்தை வைத்திருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணப்பையை பிடித்து இழுத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பிரேமும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரேம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயம் அடைந்த புவனேஸ்வரி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News