செய்திகள்
ராம்ராஜ்மீனா

ரெயிலில் இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: மயிலாடுதுறையில் பதுங்கிய ராஜஸ்தான் வாலிபர் கைது

Published On 2017-06-16 09:46 IST   |   Update On 2017-06-16 09:46:00 IST
ஓடும் ரெயிலில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த ராஜஸ்தான் வாலிபரை கைது செய்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை:

ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக கலாப்பூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லங்கடாபுரத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர் ராம்ராஜ்மீனா (வயது 30) என்பவரை தேடி வந்தனர்.

இவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் பதுங்கி இருப்பதாக ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலாப்பூரியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கர்தாசில் ஆகியோர் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்தானை சந்தித்து குற்ற வழக்கில் தொடர்புடைய ராம்ராஜ்மீனாவை கண்டுபிடித்து தர கேட்டுக் கொண்டனர். அதனையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து, ராம்ராஜ் மீனாவை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் சிவா, ராமமூர்த்தி, பாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் ராம்ராஜ்மீனா தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் சென்று ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பதுங்கி இருந்த ராம்ராஜ்மீனாவை கைது செய்து, ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் ராம்ராஜ்மீனாவை அழைத்து சென்றனர்.



Similar News