செய்திகள்

சட்டமன்றத்தில் விவாதம் நடத்த தி.மு.க.வை அனுமதித்து இருக்கவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Published On 2017-06-15 10:00 IST   |   Update On 2017-06-15 10:01:00 IST
எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த தி.மு.க.வை அனுமதித்து இருக்கவேண்டும் என புதுக்கோட்டையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் சாகுபடிக்காக பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்து நாட்கள் நடைபெற்ற போராட்டத்தால் அந்த மாநிலம் ஸ்தம்பித்தது. பிறகு கடனை அந்த மாநில அரசு ரத்து செய்தது.

பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 9 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் இந்தப்போராட்டம் தொடர்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சாகுபடி செலவைவிட 1½ மடங்கு கூடுதல் விலை வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை அரசு ஏற்க மறுத்தது. மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது அதை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மோடி அரசும் வழங்க மறுத்து வருகிறது. அதே போல தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயக் கடனையும் ரத்து செய்வதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காதது, வார்தா புயல் நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மாறாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இரு அணிகளும் மத்திய அரசிடம் நெருக்கம் காட்டுவதிலேயே போட்டி போடுகிறது. அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற தனக்கு கீழ் இயங்கும் அமைப்புகளை வைத்து இரு அணிகளையும் மிரட்டி தங்கள் பக்கம் வைத்திருக்கிறது மத்திய அரசு.

காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு உள்ளிட்ட விவாகரங்கள் நீதிமன்றத்தில் இருக்கும்போது சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக சட்ட மன்றத்தில், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்தை காரணம் காட்டி தற்பொழுது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதம் நடத்த அனுமதிக்காததை எங்கள் கட்சி ஏற்கவில்லை.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கூட்டத் தொடரிலாவது சட்டம் கொண்டுவர மாநில அரசு முயற்சிச்க வேண்டும். வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வின் வேட்பாளரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரிக்கக் கூடாது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தமிழகத்தில் பல வடிவங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி, ஆணவக் கொலைகளுக்கு தனியாக சட்டம் இயற்ற வலியறுத்தியும் பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம் சென்னைக்கு வரும் 23-ந் தேதி வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது . உடனடியாக காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பல மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால், கிராமப்புறங்களில் பல பணிகள் முடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News