செய்திகள்
குமரி அனந்தன் பேட்டி அளித்த காட்சி.

ஈரோடு உள்பட 4 மாவட்ட மக்களுடன் உண்ணாவிரதம்: குமரி அனந்தன்

Published On 2017-06-08 14:59 IST   |   Update On 2017-06-08 15:00:00 IST
பூரண மது விலக்கு மற்றும் நதிநீர் இணைப்பு கேட்டு ஈரோடு உள்பட 4 மாவட்ட மக்களுடன் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

காந்திய பேரவை தலைவர் குமரி அனந்தன் ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பூரண மதுவிலக்கு கேட்டு நான் 14 முறை பாத யாத்திரை சென்று வந்துள்ளேன். இப்போது மதுவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பூரண மதுவிலக்கு வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களை ஒன்று திரட்டி ஜூலை மாதம் 15-ந் தேதி கோவையில் உண்ணாவிரதம் நடத்த உள்ளேன்.

ஒருவர் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் இந்த உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது சரியல்ல.

தமிழை உலக பொது மொழியாக அறிவிக்க வேண்டும், இதை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய அரசுக்கு நான் கடிதம் எழுதி வருகிறேன்.

தமிழக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசி அவர் மூலம் தமிழ் உலக பொது மொழியாக அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.

Similar News