செய்திகள்

நாங்க ரொம்ப நல்லவங்க மதுக்கடையை மூடாதீங்க: எம்.எல்.ஏ.விடம் கெஞ்சி கோரிக்கை விடுத்த குடிமகன்

Published On 2017-05-14 19:59 IST   |   Update On 2017-05-14 19:59:00 IST
எங்களால் மக்களுக்கு எந்த தொல்லையும் கிடையாதுங்க, நாங்க ரொம்ப நல்லவங்க மதுக்கடையை மூடாதீங்க என்று எம்.எல்.ஏ.விடம் கெஞ்சி கோரிக்கை விடுத்த குடிமகன்.
ஈரோடு:

ஈரோடு முத்தாம்பாளையம் பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான  கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அவர்கள் எம்.எல்.ஏ. விடம் "எங்கள் பகுதியில் ஒரு மதுக்கடை உள்ளது. இதனால் எங்களால் நிம்மதியாக நட மாட முடியவில்லை. அந்த மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும்'' என்று கூறினர்.
அதற்கு எம்.எல்.ஏ. ராமலிங்கம் "அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்'' என்று கூறினார்.

அப்போது அந்த பகுதி யை சேர்ந்த சங்கர் என்ற முதியவர் அங்கு ஓடி வந்தார். அவர் எம்.எல்.ஏ.விடம் கெஞ்சி கூறியதாவது:-

இந்த மதுக்கடையால் எந்த தொல்லையும் இல்லீங்க. இந்த பகுதியில் இருக்கும் ஒரே கடை இந்த கடைதானுங்க. இதையும் மூடிட்டா நாங்க (குடிமகன்கள்) எங்கே போவோம்?

இந்த கடையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாதுங்க. கடையும் ஒதுக்குப்புறத்தில் ஓரமா இருக்கு. நாங்க அமைதியாக வந்து குடிச்சிட்டு ஒரு ஓரமா போயிடுறோமுங்க. குடிக்கறவங்க எல்லாம் கெட்டவன் கிடையாது. குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாதுங்க.  எங்களை இந்த கடையில் நிம்மதியா குடிக்க விடுங்க. இந்த கடையை விட்டால் ஈரோட்டுக்கு தான் போக வேண்டும். நாங்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோமுங்க. தயவு செய்து இந்த கடையை எடுக்காதீங்க.

இவ்வாறு அவர் இரு கையால் கும்பிட்டு கேட்டு கொண்டார்.

சிரித்தப்படியே கேட்டு கொண்ட ராமலிங்கம் எம்.எல்.ஏ. "பார்க்கலாம்'' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

Similar News