செய்திகள்

செம்மஞ்சேரியில் 10 ஆம்னி பஸ்கள் எரிந்து சாம்பல்: தீ வைத்து நாச வேலையா?

Published On 2017-05-13 11:46 IST   |   Update On 2017-05-13 11:46:00 IST
செம்மஞ்சேரியில் 10 ஆம்னி பஸ்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. தீவைத்து யாரும் எரித்து நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ஐ.டி நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் உள்ளன.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நிறுவனத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக மாத ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஆம்னி பஸ்கள் ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் மற்ற நேரங்களில் அங்குள்ள சர்வீஸ் சாலை மற்றும் காலியிடங்கள், நிறுவனத்திற்கு சொந்தமான பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

அதேபோல் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பிரபல பஸ் நிறுவனத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

அவற்றில் பழுது அடைந்த 10 பஸ்கள் சரிசெய்வதற்காக சுமார் செம்மஞ்சேரி பெருமாள் கோவில் தெரு செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு பஸ்சில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த புகை பஸ் முழுவதும் பரவி தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்குள் தீ மளமளவென பக்கத்திலிருந்த பஸ்களுக்கும் பரவி அந்த பஸ்களும் தீ பிடித்து எரிந்தன. சிறுசேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் 10 பஸ்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீவைத்து யாரும் எரித்து நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News