செய்திகள்
விபத்தில் சிக்கி சேதம் அடைந்த கார்களை படத்தில் காணலாம்

பரங்கிமலை அருகே சிக்னலை மீறி சென்ற சொகுசு காரால் விபத்து: 5 கார்கள் சேதம்

Published On 2017-05-04 08:51 IST   |   Update On 2017-05-04 08:51:00 IST
பரங்கிமலை அருகே சிக்னலை மீறி வேகமாக சென்ற சொகுசு காரால் ஏற்பட்ட விபத்தில் 5 கார்கள் சேதம் அடைந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் படுகாயம் அடைந்தார்.
ஆலந்தூர்:

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் முரளி (வயது 36), கார் டிரைவர். இவர், நேற்று மாலை சொகுசு காரை ஓட்டிக்கொண்டு சென்னை விமான நிலையம் நோக்கி வந்தார். பரங்கிமலையை தாண்டி பழைய விமான நிலையம் நோக்கி சென்ற போது சிக்னல் போடப்பட்டது. அதற்குள் சிக்னலை கடந்து சென்று விடுவதற்காக காரை முரளி வேகமாக ஓட்டிச்சென்றார்.

ஆனால் அதற்குள் பச்சை விளக்கு சிக்னல் விழுந்து விட்டதால் மீனம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்கல் நோக்கி சென்ற கார் மீது சொகுசு கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முரளி ஓட்டி வந்த சொகுசு கார், பழவந்தாங்கலில் இருந்து பரங்கிமலை நோக்கி செல்ல சிக்னலுக்காக காத்திருந்த மேலும் 3 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் முரளி ஓட்டி வந்த சொகுசு கார் உள்பட 5 கார்களும் சேதம் அடைந்தன. சிக்னலுக்காக மோட்டார் சைக்கிளில் நின்று இருந்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த கணபதி (60) என்பவர் இதில் படுகாயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.

நொடிப்பொழுதில் நடந்து முடிந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு கார் டிரைவரான முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News