செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 அரசு உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும்: செங்கோட்டையன்

Published On 2017-04-28 07:59 GMT   |   Update On 2017-04-28 07:59 GMT
தமிழகம் முழுவதும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக இந்தக் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

கோபி தனியார் திருமண மண்டபத்தில் கோபி சட்டமன்ற தொகுதி மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

முகாமில் பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, ரேசன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கேட்டு மனுக்களை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

டெட் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும் தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பாடவாரியாக அறைகள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையானது எவ்வித ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் இந்தக் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.



பிளஸ்-2, எஸ்எஸ்எல்.சி. தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியாகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பதற்குள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் 25 சதவீத அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதற்கான நிதியை அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழக கல்வி துறையானது முன் மாதிரியாக விளங்கும் அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News