செய்திகள்

உறவினர் வீட்டில் சித்ரவதை அனுபவித்த சிறுமி ‘சைல்டு லைன்’ குழுவால் மீட்பு

Published On 2017-04-26 06:19 GMT   |   Update On 2017-04-26 06:19 GMT
உறவினர் வீட்டில் சித்ரவதை அனுபவித்த 13 வயது சிறுமி ‘சைல்டு லைன்’ குழுவால் மீட்கப்பட்டு, பின்னர் ஈரோடு கொள்ளுக்காடு மேட்டில் உள்ள காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
ஈரோடு:

கோபி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தந்தை, தாய் இல்லாததால் தனது தாத்தா, பாட்டி பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

திடீரென அவரது தாத்தா இறந்து போனார். பாட்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. எனவே பாட்டியால் சிறுமியை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கோபியில் உண்டு உறைவிட பள்ளியில் அந்த சிறுமி தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் சிறுமியை பார்த்துக்கொள்வதாக கூறினர்.

அதன்படி அந்த உறவினரின் வீட்டுக்கு சென்ற சிறுமி அங்குள்ள வேலைகளை செய்து வந்தார். அங்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக தெரிகிறது.

சித்ரவதையால் சிறுமி மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் இது தொடர்பாக ஈரோடு ‘சைல்டு லைன்’ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுமி சித்ரவதை செய்யப்படும் தகவலை உறுதி செய்த ‘சைல்டு லைன்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன், உறுப்பினர்கள் ஜெகநாதன், நிஷா ஆகியோர் சிறுமியின் உறவினர் வீட்டுக்கு சென்று மீட்டனர்.

பின்னர் ஈரோடு கொள்ளுக்காடு மேட்டில் உள்ள காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

Similar News