செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

ஈரோட்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-04-25 10:47 IST   |   Update On 2017-04-25 10:47:00 IST
ஈரோட்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் சமையல் அறை ஜன்னலை உடைத்து ரூ. 7½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள செட்டிபாளையம் உழவன் நகரை சேர்ந்தவர் அமுதா (வயது 47).

இவர் ஈரோடு செங்கோடம்பள்ளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கிறார்.

அமுதா மட்டும் உழவன் நகரில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.

வீட்டின் பின்புறத்தில் தோட்டம் உள்ளது. அந்த வழியாக வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சமையல் அறையின் ஜன்னலை பெயர்த்து எடுத்து அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை, 1½ லட்சம் பணம், பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வந்த வழியாக தப்பி சென்றனர்.

இன்று காலை எழுந்த அமுதா சமையல் அறையின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பதையும், நகை, பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை போன நகை, பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 7½ லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கொள்ளை தொடர்பாக அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ, கொள்ளையர்கள் உள்ளே நுழைந்த சமையல் அறையின் ஜன்னல் ஆகிய இடங்களில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

தலைமை ஆசிரியை அமுதா ஏ.சி. அறையில் படுத்து தூங்கியதால் ஜன்னல், பீரோவை உடைக்கும் சத்தம் கேட்காமல் போனது. மேலும் மர்ம கும்பல் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளது.

கொள்ளையர்களால் உடைத்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஜன்னல்.

வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருப்பதை அறிந்து கைவரிசை காட்டி உள்ளனர். எந்த வழியாக வீட்டுக்குள் நுழையலாம் என்று வெகுநாட்கள் அவர்கள் நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News