செய்திகள்
மலைப்பாதையில் கார் தீ பிடித்து எரிந்த காட்சி.

திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்தது - காரில் வந்த 2 பேர் உயிர் தப்பினர்

Published On 2017-04-20 07:53 GMT   |   Update On 2017-04-20 07:53 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் வந்த 2 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலை உச்சியை அடைய 27 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த வழியாகத்தான் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முடியும்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ரெஜின் மற்றும் கோபாலன் ஆகிய 2பேர் ஒரு காரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் சென்ற கார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தாண்டி திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து குபு..குபுவென எரிந்தது. இதை கண்ட காரில் இருந்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மலைப்பாதை பள்ளத்தில் விழுந்து விடாமல் ஓரமாக காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் காரிலிருந்து கீழே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது பற்றி ஆசனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்த காரின் தீயை அணைத்தனர். எனினும் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.

என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓடும் காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பும் ஏற்பட்டது.

இது பற்றி ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Similar News